33

நான் ஜபல்பூர் எனப்படும் ஊரில்
இருபது வருடங்கள் தங்கி இருந்தேன். அதன் பழைய பெயர் ஜபலாபுர். அது மிகப் பெரிய
ஞானிகளில் ஒருவரும், உபநிஷதத்தை எழுதியவருள் ஒருவருமான சத்யகம் ஜபால் என்ற
ஞானியின் பெயரால் அழைக்கப்பட்டது. இந்த கதை சத்யகம் ஜபால் தெடர்புடையது.

சத்யகம் குழந்தையாய் இருக்கும்
போதே மிகவும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் அனுபவிக்காதவரை அவர் எதையும்
நம்புவதில்லை. அவர் இளைஞனாக ஆன போது – அவருக்கு பன்னிரெண்டு வயதானபோது – அவர் தனது தாயிடம், “இந்த நாட்டின் இளவரசன் காட்டில் இருக்கும்
குருகுலம் செல்கிறான். அவனுக்கும் எனது வயதுதான். நானும் போக விரும்புகிறேன்,
நானும் வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு இதுதான்
நேரம்.” என்றார்.

தாய், “அது மிகவும் கஷ்டம், சத்யகம். ஆனால் எனக்குத்
தெரியும், நீ பிறவியிலேயே தேடுதல் ஆர்வமுடையவன். நீ உன்னை ஒருநாள் ஒரு குருவிடம்
அனுப்பச் சொல்லிக் கேட்பாய் என்று நான் பயந்து கொண்டேதான் இருந்தேன். நான் ஒரு
ஏழைபெண். ஆனால் அது பிரச்னையல்ல. பிரச்னை என்னவென்றால் நான் இளமையாக இருந்தபோது பல வீடுகளில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் ஏழை, ஆனால் அழகானவளாக இருந்தேன். அதனால் உனது தந்தை யாரென்று தெரியாது. நான் உன்னை ஒரு குருவிடம் அனுப்பினால் அவர்கள் உன் தந்தை யாரென்று கேட்பார்கள். உன் தந்தை யாரென்று தெரியாது என்று சொன்னால் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடும்.

ஆனால் முயற்சி செய்வதில் எதுவும்
தப்பில்லை. நீ போய் நான் உன்னிடம் இப்போது சொன்னது போலவே உண்மையை அப்படியே சொல். நான் ஏழையாக இருந்ததால் பலர் என்னுடைய உடலை உபயோகித்திருக்கின்றனர். என்னுடைய தந்தை யாரென்று எனக்குத் தெரியாது என்பதை சொல். உன்னுடைய பெயர் சத்யகம் என்றும் உன் தாய் பெயர் ஜபாலா என்றும் சொல். அப்போது அவர்கள் உன்னை சத்யகம் ஜபால் என்று அழைக்கட்டும். உண்மையை பொறுத்தவரை உனது தந்தை யாரென்பது ஒரு பிரச்னையல்ல.”

சத்யகம் காட்டில் உள்ள ஒரு வயதான
குருவிடம் சென்றான். நிச்சயமாக முதல் கேள்வி, உன்னுடைய பெயர் என்ன?
உன்னுடைய தந்தை பெயர் என்ன? என்று கேட்பார்கள் என்று தெரிந்தே போனான்.

அவர்கள் கேட்டவுடன் அவன் தன் தாய் சொன்னதை அப்படியே சொன்னான்.

அங்கு பல இளவரசர்கள், பணக்காரர்களின் புதல்வர்கள் ஆகியோர் சீடர்களாக இருந்தனர். அவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் அந்த வயதான குரு, “நான் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன்.
உனது தந்தை யாரென்பது பொருட்டல்ல. நீ ஆணித்தரமாகவும், நேர்மையாகவும்,
பயமில்லாமலும் இருப்பது தான் இங்கு முக்கியமான விஷயம். எந்தவிதமான தர்மசங்கடமும்
இல்லாமல் உண்மையை சொல்லும் நேர்மை உன்னிடம் இருப்பதுதான் சிறப்பு.  உன் தாய் உனக்கு சரியான பெயர்தான் கொடுத்திருக்கிறாள் சத்யகம் சத்யகம் என்றால் உண்மையை அடைவது மட்டுமே தேடுதலாக கொண்டவன் என்று பொருள். உனக்கு மிக அழகான தாய் கிடைத்திருக்கிறாள், நீ இன்றிலிருந்து சத்யகம் ஜபால் என்று அழைக்கப்படுவாய்.

இங்கு பிராமணர்கள் மட்டுமே சீடர்களாக ஏற்றுக்கொள்ளப் படுவது தான் சம்பிரதாயம். நான் உன்னை ஒரு பிராமணன் என்று பிரகடனப்படுத்துகிறேன். ஏனெனில் பிராமணர்களுக்கு மட்டுமே இந்த உண்மையை ஒத்துக் கொள்ளும் தைரியம் இருக்கும்.”  என்றார்.

அவை மிக அழகான நாட்கள். அந்த வயதான குருவின் பெயர் உதாலக்.

சத்யகம் அவருடைய மிக நெருங்கிய அன்பான சீடனாக ஆனான். அவருக்கு தகுதி இருந்தது. அவர் மிகவும் தூய்மையானவராகவும் மிகவும் நிர்மலமானவராகவும் இருந்தார்.

ஆனால் உதாலக்கு சில வரையறைகள் இருந்தன. அவர் கற்றுக் கொடுப்பதில் மிகச் சிறந்தவராக இருந்த போதிலும் அவர் ஞானமடையவில்லை. அதனால் அவர் சத்யகமுக்கு எல்லா சமயநூல்களையும் கற்றுக் கொடுத்தார், அவருக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார், ஆனால் அவர் எல்லோரையும் நம்பவைப்பது போல சத்யகம்மை நம்பவைக்கவில்லை. சத்யகம் கேள்வி கேட்பார் என்பதற்காக அல்ல. அவருடைய நிர்மலமான தன்மை அந்த அளவு உண்மையானதாக இருந்தது. அவர், “நான் உனக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாமே நான் நூல்களில் இருந்து படித்ததுதான். அவை எனக்கு சொந்தமானவை  அல்ல. நான் அவற்றை அனுபவப்படவில்லை. அதை நான் வாழ்ந்து பார்த்ததில்லை. இன்னும் உள்ளே காட்டிற்க்குள் வாழும் ஒரு மனிதரை எனக்குத் தெரியும். அவர் மிகவும் அன்பானவர், கருணையானவர், உண்மையே வடிவானவர். நீ அவரிடம் போ.” என்று கூறி சத்யகம்மை அவரிடம் அனுப்பி வைத்தார்.

உதாலக் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாரே தவிர அவரை நேரில் பார்த்ததில்லை. உதாலக் மிகப் பிரபலமானவர், சிறந்த பண்டிதர்…….

சத்யகம் அந்த இன்னொருவரிடம் சென்றார். அவர் சத்யகம்முக்கு பல புதிய சமய நூல்களையும், எல்லா வேதங்களையும், இந்த உலகத்தின் பழைமையான நூல்களையும் கற்பித்தார். பல வருடங்களுக்கு பிறகு, “இப்போது உனக்கு அனைத்தும் தெரியும், இனி
கற்பதற்கு எதுவும் இல்லை. நீ திரும்பி வீட்டுக்குப் போகலாம்.” என்றார்.

முதலில் சத்யகம் உதாலக்கை காண சென்றார். உதாலக் ஜன்னல் வழியே காட்டிக்குள்ளிலிருந்து வரும் ஒத்தையடிப் பாதையின் வழியே சத்யகம் வருவதை பார்த்தார். அவர் அதிர்ச்சியடைந்தார். சத்யகம்மின் நிர்மலமான தன்மை காணாமல் போயிருந்தது. அதற்கு பதிலாக பெருமை குடியிருந்தது – எல்லோருக்கும் ஆவது போலவே, அவருக்கு இப்போது இந்த உலகத்திலுள்ள தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் தெரியும் என்ற நினைப்பே ஆணவத்தை கொடுத்திருந்தது.

அவர் உள்ளே வந்தார். அவர் உதாலக்கின் பாதங்களை தொட குனியும்போது உதாலக், “எனது பாதங்களில் விழாதே. முதலில் நீ உன்னுடைய நிர்மலமான தன்மையை எங்கே தொலைத்தாய் என எனக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை தவறான மனிதரிடம் அனுப்பி விட்டேன் போலத் தெரிகிறது” என்றார்.

சத்யகம், “தவறான மனிதரிடமா, அவர் அறிய வேண்டிய அனைத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்தார் .“ என்று கூறினார்.

உதாலக், “நீ எனது பாதங்களில் விழுவதற்கு முன் நான் உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன் – நீ எதையாவது அனுபவப்பட்டாயா அல்லது எல்லாமே வெறும் தகவல்கள் மட்டும்தானா? ஏதாவது நிலைமாற்றம் நிகழ்ந்ததா? உனக்கு தெரிந்திருப்பவை அனைத்தும்
உன்னுடையவை என்று கூற முடியுமா?” என்று கேட்டார்.

சத்யகம், “அப்படி எதையும் கூற முடியாது. நான் அறிந்திருப்பவை அனைத்தும் நூல்களில் உள்ளவை மட்டுமே. நான் எதையும் அனுபவப்படவில்லை” என்று கூறினார்.

அப்போது உதாலக், “நீ போன பிறகு வேறொரு மனிதரைப் பற்றி நான்
கேள்விப்பட்டேன். நீ அவரிடம் போ. உனக்கு அனுபவப்படாத வரை திரும்பி வராதே. நான்
உன்னை அனுப்பும் போது இருந்ததை விட மதிப்பு குறைந்தவனாக திரும்பி வந்திருக்கிறாய்.
மதிப்பிட முடியாத ஒன்றை நீ இழந்து விட்டாய். அறிவு என்று நீ அழைப்பது கடன் வாங்கப்
பட்டதாக இருந்தால் அது உனது அறியாமையை மூடி மறைப்பதாக மட்டுமே இருக்கும். அது
உன்னை அறிந்தவனாக ஆக்காது. நான் சொல்லும் இந்த மனிதரிடம் செல், அவரிடம், உண்மையை பற்றி, கடவுளைப் பற்றி, அன்பைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் பெறுவதற்காக வரவில்லை என்று கூறு. நீ கடவுளை, அன்பை, உண்மையை தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறாய் என்று சொல். உங்களால் இதை செய்ய முடியுமென்றால் நான் இங்கே இருக்கிறேன். இல்லையென்றால் நான் நேரத்தை வீணாக்காமல் வேறு ஒரு குருவை தேடிப் போகிறேன் என்று சொல்” என்று கூறினார்.

சத்யகம் சென்று அப்படியே கூறினார்.

அந்த குரு ஒரு மரத்தடியில் தனது சில சீடர்களுடன் உட்கார்ந்திருந்தார். இந்த கோரிக்கையை கேட்டவுடன் அவர், “அது சாத்தியமானதுதான், ஆனால் நீ வித்தியாசமான
ஒன்றை கேட்கிறாய். இங்கே பல சீடர்கள் உள்ளனர். அவர்கள் இன்னும் அதிக விவரமான
தகவல்கள் கேட்கின்றனர். இதைப் பற்றி, அதைப் பற்றி தெரிந்து கொள்ள
விரும்புகின்றனர். ஆனால் உனக்கு தகவல்கள் சேகரிக்க விருப்பம் இல்லையென்றால், நீ
உண்மையை தெரிந்து கொள்வதற்காக எதையும் செய்ய தயார் என்றால் சத்தியத்திற்கான உனது
தேடுதல் உன்னையே நீ அர்ப்பணித்துக்கொள்ள தயாராக இருக்குமானால் நான் உனக்காக ஒரு
வழி கண்டுபிடிக்கிறேன்”. என்றார்.

சத்யகம், “நான் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக
இருக்கிறேன். ஆனால் உண்மையறியாமல் திரும்பி செல்ல என்னால் முடியாது. எனக்கு சதயகம்
என்று பெயரிட்ட எனது தாயிடமோ, அல்லது நான் உண்மையை கூறிய ஒரே காரணத்தினாலேயே நான் பிராமணனா இல்லையா என்று கவலைப் படாமல் என்னை ஏற்றுக் கொண்ட எனது குருவிடமோ திரும்பி போக முடியாது. என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.” என்று கேட்டான்.

குரு, “இங்கே நீ பார்க்கும் இந்த பசுக்களை கூட்டிக்
கொண்டு உள்ளே காட்டிற்க்குள் சென்று விடு. எந்த மனிதருடனும் தொடர்பு கொள்ள முடியாத
வண்ணம் எவ்வளவு அடர்ந்த காட்டிற்க்குள் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் உள்ளே சென்று
விடு. நீ மொழியை, வார்த்தைகளை மறக்கவேண்டும் என்பதுதான் காரணம். பசுக்களுடன் வாழ்,
அவற்றை பாதுகாத்து வா, உனது குழலுடன் விளையாடு, நடனமாடு – ஆனால் வார்த்தைகளை
மறந்துவிடு. இந்த பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆனவுடன் திரும்பி வா.” என்றார்.

இங்கே இருந்த மற்ற சீடர்களுக்கு
என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை – ஏனெனில் அங்கு இருந்தது ஒரு டஜன் அல்லது இரண்டு
டஜன் பசுக்கள்தான். அவை எப்போது ஆயிரம் பசுக்கள் ஆவது ?

ஆனால் சத்யகம் பசுக்களை கூட்டிக்
கொண்டு அடர்ந்த காட்டுக்குள், மனித சஞ்சாரமற்ற இடத்துக்கு, மனித வாடையற்ற
இடத்துக்கு சென்றார். முதல் சில தினங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பசுக்கள்
மட்டுமே அவரது தோழமையாக இருந்தன. அவை மிக அமைதியான மக்கள். அவன் தனது
புல்லாங்குழலை வாசிப்பான், காட்டில் தனியாக நடனமாடுவான், மரத்தடியில் படுத்து
ஓய்வெடுப்பான்.

முதல் சில வருடங்கள் தொடர்ந்து
பசுக்களை கணக்கெடுத்து வந்தான். பின் மெது மெதுவாக அதை விட்டு விட்டான். ஏனெனில்
அவை ஆயிரமாக மாறுவது இயலாததாக தோன்றியது. மேலும் எப்படி கணக்கெடுப்பது என்பதையும் அவன் மறந்துவிட்டான். மொழி மறைந்துவிட்டது.

வார்த்தைகள் மறைந்துவிட்டன. கணக்கு எடுக்க இயலவில்லை.

இந்த கதை மிகவும் அழகானது.

பசுக்களின் எண்ணிக்கை ஆயிரம்
அடைந்தவுடன் பசுக்கள் கவலைப்பட ஆரம்பித்தன. ஏனெனில் அவைகள் வீடு செல்ல விரும்பின.
இவனுக்கு எப்படி எண்ணுவது என்பது மறந்து போய் விட்டது. இறுதியில் பசுக்கள், “நாம் இவனுக்கு சொல்லியாக வேண்டும். இல்லாவிடில் இந்த தனிமையான வனமே நமது கல்லறையாகிவிடும்.” என்று முடிவெடுத்தன.

அதனால் ஒருநாள் பசுக்கள்
சத்யகம்மை பிடித்து நிறுத்தி, “இங்கே பார், சத்யகம், நாங்கள் இப்போது ஆயிரம் பசுக்களாகி விட்டோம். நாம் இப்போது வீடு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றன.

சத்யகம், “உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இப்போது
என்னிடம் இதை சொல்லியிராவிட்டால்…….. நான் வீட்டை பற்றியும் திரும்பி போவது
பற்றியும் மறந்து விட்டேன். ஒவ்வொரு கணமும் மிகவும் அழகானதாக….. பரவசமாக
இருக்கிறது. இந்த மௌனத்தில் மலர்கள் பூச்சொரிகின்றன. நான் எல்லாவற்றையும் மறந்து
விட்டேன். நான் யார் என்பதையும் நான் எதற்காக இங்கே வந்தேன் என்பதையும் நான்
மறந்து விட்டேன். இங்கே எல்லாமும் முடிவடைந்துவிட்டது. புல்லாங்குழல் வாசிப்பது
மட்டுமே போதும். மரத்தடியில் ஓய்வெடுப்பது மட்டுமே போதும், இந்த அழகான பசுக்கள்
சுற்றிலும் அமைதியாக இருப்பதை பார்ப்பது மட்டுமே மிக அருமையானது. ஆனால் நீங்கள்
வற்புறுத்தினால், நாம் திரும்பிப் போவோம்.” என்றான்.

அந்த குருவின் சீடர்கள் சத்யகம்
ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவதை பார்த்தனர். அவர்கள் குருவிடம், “அவன் ஆயிரம் பசுக்களோடு திரும்பி வருவான் என நாங்கள் நினைக்கவேயில்லை. அவன் வந்து விட்டான். நாங்கள் எண்ணி விட்டோம் அவை மிகச் சரியாக ஆயிரம் பசுக்கள் உள்ளன. அவன் வருகிறான்.” என்றனர்.

அவன் வந்து நின்றான்……..பசுக் கூட்டத்தின் நடுவே நின்றான்.

குரு தனது சீடர்களிடம், “நீங்கள் தவறாக எண்ணியிருக்கிறீர்கள். அங்கே
ஆயிரத்தோரு பசுக்கள் உள்ளன. நீங்கள் சத்யகம்மை எண்ண மறந்து விட்டீர்கள். அவன்
உங்களது உலகத்தை விட்டு தாண்டி போய் விட்டான். அவன் நிர்மலமான தன்மையினுள்,
மௌனத்தினுள், அறிவுக்கெட்டாதனுள் நுழைந்து விட்டான். அவன் பசுக்கள் எப்படி
நிற்கிறதோ அங்கேயே நிற்கிறான் பாருங்கள்.” என்றார்.

குரு, “சத்யகம், நீ வெளியே வரலாம். இப்போது நீ உன்னை
இங்கே அனுப்பிய உனது குருவிடம் செல்லலாம். அவர் மிகவும் வயதானவர், அவர் உன்
வருகைக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடும். உன் தாய் உனக்காக காத்துக்
கொண்டிருப்பாள்.” என்றார்.

சத்யகம் தனது முதல் ஆசிரியரிடம் –
சத்யகம் ஒரு தகவல் களஞ்சியமாக மட்டுமே மாறியதால் தனது வெகுளித்தனத்தை தொலைத்து,தனது நிலையிலிருந்து கீழிறங்கி ஒரு பிராமணனாக இல்லாமல் போய் விட்டார் எனக் கூறி தனது பாதத்தில் விழக் கூடாது என தடுத்த உதாலக்கிடம் – திரும்பி வந்தார். இவர்
வருவதை ஜன்னல் வழியாக பார்த்த உதாலக் பின் வாசல் வழியாக ஓடிப் போய் விட்டார்.
ஏனெனில் இப்போது சத்யகம் தனது பாதங்களில் விழ அனுமதிக்க கூடாது. தான்தான் அவர்
பாதங்களில் விழ வேண்டும். ஏனெனில் உதாலக் இப்போது வெறும் பண்டிட் மட்டுமே, ஆனால்
சத்யகம் இப்போது விழிப்புணர்வு பெற்று அறிந்தவராகி விட்டார்.

உதாலக் வீட்டிலிருந்து தப்பிப் போய் விட்டார். “என்னால் அவரை சந்திக்க முடியாது.
நான் வெட்கமடைகிறேன். உதாலக் இறந்து போய்விட்டார். அவர் உன்னை நினைத்துக் கொண்டே
இறந்தார் என சத்யகம்மிடம் சொல்லி விடு. அவரை அவருடைய தாயிடம் போக சொல்” என தனது மனைவியிடம் சொல்ல சொல்லிவிட்டு போய் விட்டார். வெவ்வேறு விதமான மக்கள் இருக்கிறார்கள்.

சத்யகம் வீடு திரும்பினார்.

தாய்க்கு மிகவும் வயதாகி
விட்டிருந்தது. ஆனால் அவள் காத்துக் கொண்டே………..இருந்தாள். “உண்மை எப்போதும் ஜெயிக்கும் என்பதை நீ நிரூபித்துவிட்டாய், சத்யகம். பிராமணன் என்பவன் பிறப்பது இல்லை, பிராமணன் என்பது அடையவேண்டிய ஒரு குணாதிசியம் என்பதை நீ நிரூபித்துவிட்டாய். ஒவ்வெருவரும் பிறப்பால் சூத்திரர்தான், ஏனெனில் ஒவ்வொருவரும் பிறப்பில் ஒன்றானவரே. ஒருவன் தன்னை தூய்மைப் படுத்திக் கொள்வதனாலும், ஒருமை படுத்திக் கொள்வதனாலும், மையம் மற்றும் ஞானத்தை அடைவதனாலும், தான் ஒரு பிராமணன் என்பதை நிரூபிக்கவேண்டும். பிராமண குடும்பத்தில் பிறப்பதால் மட்டுமே அவன் பிராமணன் ஆவதில்லை.” என்றாள்.

License

Share This Book