3

இரண்டாவது செவிவழி செய்தி என்னவென்றால் டாய் என்ற பெயர் கொண்ட இந்த மலையில் வசித்த போதிதர்மர்தான் தேநீரை உருவாக்கிய முதல் மனிதர் என்பதாகும். டீ என்னும் பெயர் டாய் என்னும் பெயரிலிருந்து வந்ததாகும். ஏனெனில் அது டாய் என்னும் மலையில் உருவாக்கப்பட்டது. எல்லா மொழியிலும் உள்ள தேநீரை குறிக்கும் சொற்கள் ஒரே மூலத்திலிருந்தே வந்துள்ளன. ஆங்கிலத்தில் அது டீ, ஹிந்தியில் அது சாய், சைனீஸ் வார்த்தை ச்சா என்றும் கூறப்படுகிறது. மராத்தியில் அது ச்சா என்றழைக்கப்படுகிறது.

போதிதர்மர் தேநீரை உருவாக்கிய விதம் சரித்திரபூர்வ உண்மையாக இருக்க முடியாது. ஆனால் அது முக்கியத்துவமானது. அவர் கிட்டதட்ட எல்லா நேரங்களிலும் தியானம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இரவில் சில நேரங்களில் தூங்கத் தொடங்கி விடுவார். எனவே தூங்காமல் இருப்பதற்காக, அவருடைய கண்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுப்பதற்காக அவரது கண் இமைகளின் முடிகள் அனைத்தையும் பிடுங்கி அவர் கோவில் நிலத்தில் எறிந்து விட்டார். கதை என்னவென்றால் இந்த கண் இமைகளிலிருந்துதான் தேநீர் செடி வளர்ந்தது. அவைதான் முதல் தேநீர் செடிகள். அதனால்தான் தேநீரை குடித்தபிறகு உன்னால் தூங்க முடியாது. மேலும் புத்த மதத்தில் தியானத்திற்காக தேநீர் அருந்துவது பழக்கமாகி விட்டது. தேநீர் மிகவும் உதவி புரியக் கூடியது. எனவே முழு புத்த உலகமும் தியானத்தின் ஒரு பகுதியாக தேநீர் அருந்துகிறது. ஏனெனில் அது உன்னை சுறுசுறுப்புடனும் விழிப்புடனும் வைத்திருக்கிறது. இரண்டு லட்சம் புத்த மத பிட்சுக்கள் சீனாவிலிருந்தாலும் கூட போதிதர்மர் தனது சீடர்களாக ஏற்றுக் கொள்ள தகுதியுடையவர்களாக நான்கு பேரை மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது. அவர் உண்மையாகவே மிகவும் குறிப்பாக தேர்ந்தெடுத்தார். அவரது முதல் சீடரான ஹூய்கோவை கண்டுபிடிக்க அவருக்கு கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் பிடித்தது. இது ஒரு சரித்திர உண்மை. ஏனெனில் மிகவும் பழமையான குறிப்புகள் உள்ளன.

கிட்டதட்ட போதிதர்மருடைய காலத்திய குறிப்புகள் எல்லாவற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றவை குறிப்பிட படா விட்டாலும் வூ வை அரண்மனைக்கு திருப்பி அனுப்பிய பிறகு அவர் கோவில் சுவற்றைப் பாரத்தபடி அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடப்படுள்ளது. அவர் அதனை ஒரு சிறந்த தியானமாக ஆக்கிக் கொண்டார். அவர் வெறுமனே எளிமையாக சுவற்றை பார்த்துக் கொண்டே இருப்பார். அதிகநேரம் நீ சுவற்றை பார்த்துக் கொண்டேயிருந்தால் உன்னால் யோசிக்க முடியாது. மெதுமெதுவாக அந்த சுவற்றைப் போலவே உனது மனதின் திரையும் காலியாகி விடுகிறது.

மேலும் அதற்கு இரண்டாவது காரணமும் இருந்தது. என்னுடைய சீடனாக இருக்கும் தகுதியுடைய யாராவது ஒருவர் வரும்வரை நான் யாரையும் பார்க்க மாட்டேன் என அவர் அறிவித்தார். மக்கள் வருவார்கள், அவருக்கு பின் அமர்வார்கள். அது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. இந்த முறையில் யாரும் பேசியதில்லை. அவர் சுவற்றிடம் பேசுவார். மக்கள் அவருக்கு பின் அமர்ந்திருப்பார்கள். ஆனால் அவர் வருபவர்களை பார்க்க மாட்டார். ஏனெனில் அவர் வருபவர்கள் என்னை அதிகமாக காயப்படுத்துகிறார்கள். அவர்கள் வெறும் சுவறைப் போல இருக்கிறார்கள். யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஒரு அறியாமை நிலையில் மக்களைப் பார்ப்பது ஆழமான வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மையான ஒரு சுவறைப் பார்ப்பது கேள்வியேயில்லை. ஒரு சுவர் எப்படியிருந்தாலும் அது சுவரே. அது கேட்க முடியாது. எனவே காயப்பட தேவையில்லை. யாராவதொருவர் அவருடைய செயலின் மூலம் அவர் எனது சீடராக தயாராக இருக்கிறார் என்று நீரூபித்தால் மட்டுமே நான் வருபவர்களைப்பார்த்து திரும்புவேன் என்று கூறினார், ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன. மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எந்த செயல் அவருக்கு திருபதியளிக்கும் என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. பிறகு அந்த இளைஞன் ஹூய்கோ வந்தான். அவன் அவனுடைய கைகளில் ஒன்றை வாளால் வெட்டி அந்தக் கையை போதிதர்மர் முன் வீசிவிட்டு, இது ஆரம்பம்தான். நீங்கள் திரும்புங்கள் அல்லது என் தலை உங்கள் முன் உருளும். நான் எனது தலையையும் வெட்டப்போகிறேன் என்றான்.

போதிதர்மர் திரும்பி, நீ எனக்கு சீடனாக தகுதியுடைய மனிதன். தலையை வெட்ட வேண்டியதில்லை. நாம் அதனை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த மனிதன் ஹூய்கோதான் அவரது முதல் சீடர். முடிவில் போதிதர்மர் சீனாவை விட்டு செல்லும்போது அவர் ஹூய்கோவிற்குப்பிறகு மேலும் மூன்று சீடர்களை சேர்த்திருந்தார். அவர் சீனாவை விட்டு செல்ல முடிவெடுத்த பிறகு தனது நான்கு சீடர்களையும் அழைத்து, எளிமையான வார்த்தைகளில், சிறிய வாக்கியங்களில், தந்தி முறையில் என்னுடைய போதனைகளின் மூலத்தைக் கூறுங்கள். நாளைக்காலையில் நான் இமயமலைக்கு திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளேன். அதனால் உங்கள் நால்வரில் ஒருவரை வாரிசாக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். என்றார்.

முதலாமவன், மனதை தாண்டிச் செல்வது, முற்றிலும் மௌனமாக இருப்பது, அதன்பிறகு அனைத்தும் தானாகவே நடக்கிறது எனக் கூறினான். போதிதர்மர், நீ கூறியது தவறல்ல, ஆனால் நீ என்னை திருப்திபடுத்தவில்லை. உன்னிடம் எனது தோல் உள்ளது என்றார்.

இரண்டாமவன், நான் இல்லை, பிரபஞ்சம் மட்டுமே உள்ளது, என்பதை அறிந்து கொள்வதே உங்களது அடிப்படையான போதனை என்றான்.

போதிதர்மர், சிறிது பரவாயில்லை, ஆனால் அது எனது தகுதியளவிற்கில்லை. உன்னிடம் எனது எலும்புகள் உள்ளன. என்றார்.

மூன்றாவது மனிதன், அதைப்பற்றி ஏதும் சொல்ல முடியாது. எந்த வார்த்தையும் அதை கூறும் சக்தியற்றது என்றான். போதிதர்மர், நன்று, ஆனால் நீ ஏற்கனவே அதைப் பற்றி ஏதோ ஒன்றைக் கூறிவிட்டாய் உனக்கு நீயே முரண்பட்டு விட்டாய் வெறுமனே உட்கார். உன்னிடம் எனது சதை உள்ளது என்றார்

நான்காவதாக அவரது முதல் சீடன் ஹூய்கோ அவரது காலில் விழுந்தான். அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. போதிதர்மர், நீ அதை சொல்லிவிட்டாய். நீதான் எனது வாரிசாகப் போகிறாய் என்றார்.

ஆனால் இரவில் ஏதோ ஒரு சீடன் அவன் வாரிசாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்காக அவருக்கு விஷமளித்துவிட்டான்.

எனவே அவர்கள் அவரை புதைத்தனர். ஆனால் வித்தியாசமான மூன்றாவது செவிவழி செய்தி என்னவென்றால் ஒரு அரசாங்க அதிகாரி மூன்று வருடங்களுக்குப் பிறகு சீனாவிற்கு வெளியே இமயமலையை நோக்கி போதிதர்மர் நடந்துபோய்க் கொண்டிருப்பதை பார்த்தார். போதிதர்மருடைய கையில் அவருடைய தடியிருந்தது. மேலும் அவருடைய செருப்பு அந்த தடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் அவர் வெறும் காலில் நடந்து கொண்டிருந்தார். அந்த அதிகாரிக்கு அவரைத் தெரியும். அந்த அதிகாரி அவரிடம் பலமுறை வந்திருக்கிறார். அவர் ஒருமாதிரி இருந்தாலும்கூட போதிதர்மர் மீது அந்த அதிகாரி அன்பு செலுத்தினார். அதிகாரி அவரிடம் இந்த தடிக்கும் இதில் ஒரு செருப்பு தொங்குவதற்கும் என்ன அர்த்தம் என்று கேட்டார். போதிதர்மர் விரைவில் நீ அறிந்து கொள்வாய். நீ எனது மக்களை சந்தித்தால் வெறுமனே அவர்களிடம் நான் ஒரேடியாக இமயமலைக்கு செல்கிறேன் என்று கூறிவிடு என்று கூறினார்.

அதிகாரி, அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக போதிதர்மர் வாழ்ந்து கொண்டிருந்த மலையில் இருக்கும் மடாலயத்திற்கு சென்றார். அங்கு அவர் போதிதர்மருக்கு விஷம் வைக்கப்பட்டதையும் அவர் இறந்து விட்டதையும் கேள்விப்பட்டார். அங்கு அவரது சமாதியிருந்தது. அதிகாரி பேரரசரின் எல்லைப்பகுதியில் நியமிக்கப்பட்ட காரணத்தால் இதைப்பற்றி கேள்விப்பட வில்லை. அவர், கடவுளே, நான் அவரைப் பார்த்தேன். நான் ஏமாந்திருக்க முடியாது. ஏனெனில் நான் முன்பே அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் அதே மனிதன்தான். அதே கோபக்கண்கள், அதே தீப்போன்ற காட்டுத்தனமான உருவம், மேலும் உச்சக்கட்டமாக அவர் அவருடைய தடியில் அவருடைய ஒரு செருப்பை சுமந்திருந்தார் என்று கூறினார்.

சீடர்களால் அவர்களது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது சமாதியைத் திறந்தனர். அவர்கள் அங்கு கண்டதெல்லாம் ஒரே ஒரு செருப்பு மட்டுமே. அந்த காரணத்தை விரைவில் நீ அறிந்து கொள்வாய் என்று போதிதர்மர் ஏன் கூறினார் என்று அந்த அதிகாரி புரிந்து கொண்டார்.

நாம் யேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி மிகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் யாரும் அதிகமாக போதிதர்மரின் உயிர்த்தெழுந்தது பற்றி பேசுவதில்லை. ஒருவேளை அவர்கள் அவரை புதைத்தபோது அவர் கோமாவில் இருந்திருக்கலாம், அவர் சுயநினைவுக்கு வந்தவுடன் சமாதியிலிருந்து வெளியே வந்து ஒரு செருப்பை அங்கேயே விட்டுவிட்டு இன்னொரு செருப்பை அவரது தடியில் கட்டிக் கொண்டு திட்டமிட்டப்படி அவர் சென்று விட்டார்.

அவர் அழிவற்ற இமயமலையின் பனிக்கட்டிகளில் இறக்க விரும்பினார். அவர் அவரைக் குறித்து எந்த சமாதியும், எந்த சிலையும் இருக்கக்கூடாது என விரும்பினார். அவர் அவருக்கு பின்பு தொழுவதற்கு எந்த காலடி தடத்தையும் விட்டு வைக்கவில்லை. அவரை நேசிப்பவர்கள் அவரது சொந்த இருப்பினுள் நுழைய வேண்டும். நான் தொழப் போவதில்லை மற்றும் அவர் கிட்டதட்ட காற்றில் மறைந்துவிட்டார். என்ன நடந்தது, எங்கு அவர் இறந்தார் என்பது குறித்து யாரும் எதையும் கேள்விப்படவில்லை. அவர் கண்டிப்பாக இமயமலையின் அழிவற்ற பனிகளில் எங்கோ புதைந்திருக்கவேண்டும்.

License

Share This Book