16

ஒரு குரு வேலை செய்யும் விதம் திருடன் வேலை செய்யும் விதத்தைப் போன்றது.

ஒரு ஜென் கதை. ஜென்குருக்கள் இதை மிகவும் விரும்புவர். நீ இந்த கதையை முதன்முறையாக கேட்கும்போது மிகவும் ஆச்சரியப் படுவாய். – இது ஒரு திருடன் குருவான கதை.

ஜப்பானில் ஒரு திருடன் மிகச் சிறந்த திருடனாக இருந்தான். அவன் நாடு முழுவதும் பிரபலமானவனாக, எல்லோருக்கும் தெரிந்தவனாக இருந்தான். அவன் திருட்டில் கை தேர்ந்தவனாக இருந்ததால் யாராலும் அவனை பிடிக்க முடியவில்லை. அவன் கையும்களவுமாக பிடிபட்டதேயில்லை. – அவன்தான் திருடியவன் என எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும்கூட – அரசரின் கஜானாவிலிருந்து கூட அவன் திருடியிருக்கிறான். அவன் தனது முத்திரையை பதித்துவிட்டு போவதால் அவன்தான் வந்து போயிருக்கிறான் என எல்லோரும் அறிவர்.

அதன்மூலம் அது ஒரு கௌரவமான விஷயமாக மாறிவிட்டது. அந்த கை தேர்ந்த கள்வன் உன்னிடம் வந்து திருட உன்னிடம் ஏதோ ஒரு பொருள் இருக்கிறது என்பதே ஒரு மரியாதையாக மாறிவிட்டது. அதனால் அது ஒரு கௌரவம். மக்கள், “நேற்று இரவு அந்தக் கள்வன் என் வீட்டிற்க்கு வந்திருந்தான். என பெருமையாக சொல்லிக் கொண்டனர்.

ஆனால் அவனுக்கு வயதாகி விட்டது. அவனது மகன் இளைஞன். அவன் தனது தந்தையிடம், உங்களுக்கு வயதாகி விட்டது. அந்தக் கலையை எனக்குக் கற்றுக் கொடுங்கள். எனக் கேட்டான்.

அந்த தந்தை, சரி இன்று இரவு என்னுடன் வா – ஏனெனில் அது சொல்லித் தரக் கூடிய விஷயமல்ல. என்னுடைய ஆற்றலை கண்டுக் கொள்ளத் தான் வேண்டும். உனக்கு புத்திசாலித் தனமிருந்தால் அதை நீ கணடு கொள்வாய். அதை உனக்கு கற்றுத் தர முடியாது, ஆனால் உன்னால் அதை பிடித்துக் கொள்ள முடியும். நான் உனக்கு தர முடியாது, ஆனால் உன்னால் தெரிந்து கொள்ள முடியும். என்னுடன் இன்றிரவு வா. பார்க்கலாம். என்றான்.

முதல்தடவை என்பதால் மகன் மிகவும் பயந்தான். இயல்புதானே!

சுவற்றை உடைத்து மாளிகைக்குள் சென்றனர். அந்த வயதான காலத்தில்கூட தந்தையின் கரங்கள் நடுங்கவில்லை, ஆடவில்லை, ஒரு டாக்டரின் கரங்கள் போல ஆடாமல் அசையாமல் உறுதியாக நின்றது. அவன் தனது சொந்த வீட்டில் வேலை செய்வதுபோல பயமின்றி சுவற்றில் ஓட்டை போட்டான். சத்தம் கேட்டுவிடுமோ என சந்தேகமே படாமல் தனது வேலையின் திறமை மீது நம்பிக்கை கொண்டு அங்கே, இங்கே யாராவது வருகிறார்களா என திரும்பியே பார்க்கவில்லை. ஆனால் அது குளிர்கால இரவாக இருந்தபோதிலும் இளைஞனுக்கு வேர்த்து கொட்டியது. அவன் பயத்தில் நடுங்கினான். ஆனால் தந்தை தனது வேலையை சப்தமின்றி செய்தான்.

கள்வன் வீட்டினுள் நுழைந்தான். மகன் தொடர்ந்து  நுழைந்தான். அவனது கால்கள் நடுங்கியது. அவன் எந்த விநாடியும் விழுந்துவிடுவோம் என நினைத்தான். அவனுக்கு சுயஉணர்வே இல்லை. ஏனெனில் பயம்……… பிடிபட்டுவிட்டால் பின் என்ன செய்வது.

தந்தை அந்த வீட்டினுள் ஏதோ அது அவனது சொந்த வீடு போல நுழைந்தான். அவனுக்கு அந்த வீட்டைப்பற்றி, வீட்டினுள் உள்ள பொருட்கள் இருக்கும் இடம் எல்லாமே தெரிந்திருந்தது. அந்த இருட்டில் கூட எந்த சாமான்கள் மீதும் மோதிக்கொள்ளாமல், கதவில் முட்டிக்கொள்ளாமல் சென்றான். சப்தமேயில்லாமல், எந்த சப்தமும் செய்யாமல் அவன் அந்த மாளிகையின் உள்ளறையை சென்றடைந்தான். அவன் ஒரு அலமாரியை திறந்து மகனிடம் உள்ளே போய் ஏதாவது விலைமதிப்பான பொருட்கள் இருக்கிறதா என பார்க்கச் சொன்னான். மகன் உள்ளே போனான்.

தந்தை கதவை மூடி வெளியே தாழிட்டுவிட்டு, திருடன், திருடன் ஓடிவாங்க என கத்தியபடி சுவற்றில் அவர்கள் உருவாக்கியிருந்த ஓட்டை வழியாக தப்பிப் போய்விட்டான்.

இப்போது இது மிகவும் அதிகம். மகனால் என்ன இது என புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது அவன் அந்த அலமாரிக்குள் நடுங்கி வேர்த்துக் கொட்டியபடி இருந்தான். வீடு முழுவதும் விழித்துக் கொண்டு விட்டது. திருடன் எங்கே என தேடியது. அப்பாவா இது, என்னை கொன்றே விட்டார், என நினைத்தான். என்ன வகையான பாடம் இது அவன் இதுபோன்ற ஒரு விஷயத்தை கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. தந்தை பயங்கரமான கனவை மகனுக்கு தந்து விட்டார். இவன் பிடிபடுவது உறுதியாகி விட்டது. தந்தை வெளியேயிருந்து கதவை தாழிட்டுவிட்டார். மகன் கதவை திறந்து தப்பித்து போகமுடியாது.

ஒரு மணிநேரத்திற்கு பின் மகன் வீட்டை அடைந்தபோது தந்தை குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். மகன் அவன் போர்வையை விலக்கி, என்ன மடத்தனம் இது, எனக் கேட்டான்.

தந்தை, நீ திரும்பி வந்து விட்டாய். என்ன நடந்தது என சொல்ல வேண்டிய அவசியம் இல்லை – நீயும் போய் தூங்கு. இப்போது உனக்கும் இந்தக் கலை தெரிந்துவிட்டது. நாம் இதை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் மகன், என்ன நடந்ததென்று நான் உங்களிடம் சொல்லியே தீர வேண்டும். என்றான்.

தந்தை, நீ சொல்ல விரும்பினால் சொல், மற்றபடி அது எனக்கு அவசியமில்லை. நீ திரும்பி வந்ததே போதுமான அத்தாட்சி. நாளை இரவிலிருந்து நீயே சொந்தமாக போய் செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு திருடனுக்கு தேவையான புத்திசாலித்தனமும் சுதாரிப்பும் கவனமும் உன்னிடம் உள்ளது. எனக்கு உன்னைப் பற்றி மிகவும் சந்தோஷமாக உள்ளது, என்றான்.

ஆனால் மகன் மிகவும் ஆர்வமாக இருந்தான். அவன் முழு விஷயத்தையும் விவரித்து சொல்ல விரும்பினான். அவன் அத்தகைய மிகப் பெரிய வேலை செய்திருந்தான். அவன், கேளுங்களேன். இல்லாவிடில் என்னால் தூங்கவே முடியாது. நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். நீங்கள் கிட்டத்தட்ட என்னை கொன்றே விட்டீர்கள். என்றான்.

தந்தை, அது அப்படிப்பட்ட கடினமான காரியம்தான். ஆனால் ஒரு குருவானவர் இப்படிதான் வேலை செய்தாக வேண்டும். என்ன நடந்தது முழு கதையையும் சொல் என்றார்.

மகன், எங்கிருந்தோ – உறுதியாக அது என்னுடைய மனதிலிருந்தோ, என்னுடைய அறிவிலிருந்தோ அல்ல – அது உதித்தது. என்றான்.

தந்தை, நீ ஒரு திருடனோ, தியானம் செய்பவனோ, காதலனோ, விஞ்ஞானியோ, கவிஞனோ, ஓவியனோ அது முக்கியம் அல்ல. வாழ்வு என்னவாக இருந்தாலும் இதுதான் திறவுகோல். வாழ்வின் தளம் எதுவாக இருப்பினும் நிகழ்வது ஒன்றே – எதுவும் தலையிலிருந்து நிகழ்வது அல்ல. எல்லாமும் நாபியிலிருந்து நிகழ்வதுதான். அதை உள்ளுணர்வு என்றோ, மனமற்ற நிலை என்றோ, தியானம் என்றோ கூறிக்கொள்ளலாம். இவை யாவும் ஒரே விஷயத்தின் வேறுவேறு பெயர்கள். அவ்வளவுதான். அது உன்னுள் செயல்பட ஆரம்பித்துவிட்டது. அதை நான் உன்னுடைய முகத்தில் பார்க்கிறேன். உன்னைச் சுற்றி சக்தி இயக்கத்தை பார்க்கிறேன். நீ ஒரு கை தேர்ந்த கள்வனாக போகிறாய். கை தேர்ந்த கள்வனாக இருப்பதன் மூலமாக நான் தியானநிலையை அடைய முடிந்தது. அதனால் நினைவில் கொள். இதுதான் உனக்கும் தியானத்தை அடைவதற்கான வழி. என்றார்.

மகன், நான் அந்த அலமாரிக்குள் நின்று கொண்டிருந்தேன். மக்கள் எழுந்து திருடனை தேடிக் கொண்டிருந்தனர். ஒரு வேலைக்காரி கையில் விளக்குடன் வந்ததை சாவித் துவாரத்தின் வழியாக பார்த்தேன். எங்கிருந்தோ உதித்த யோசனையின் பேரில் பூனையை போல சத்தம் கொடுத்தேன் நான். இதற்குமுன் நான் அப்படி செய்ததேயில்லை. – வேலைக்காரி பூனை அலமாரிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது என நினைத்து அலமாரி கதவை திறந்தாள். அவள் கதவை திறந்தவுடன் நான் என்ன செய்தேன் எப்படி செய்தேன் என எனக்குத் தெரியாது. ஆனால் அது நிகழ்ந்தது – நான் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, அந்த பெண்ணை தள்ளிவிட்டு ஓடினேன். மக்கள் என்னை துரத்தினார்கள். வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் விழித்துக் கொண்டு விட்டனர். பக்கத்து வீட்டுக்காரர்களும் விழித்துக் கொண்டு விட்டனர். தப்பித்து ஓடி வந்த என்னை எல்லோரும் துரத்தி வந்தனர். அவர்கள் என்னை பிடித்து விடக் கூடிய அளவு நெருங்கி வந்துவிட்டனர். அந்த சமயத்தில் நான் ஒரு கிணற்றை கடந்து ஓடினேன். கிணற்றின் ஓரத்தில் பெரிய பாறை ஒன்று இருப்பதை பார்த்தேன். இப்போது அந்த பாறையை என்னால் தூக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அதை அப்போது நான் செய்தேன்.

அது போன்ற அபாயமான சந்தர்ப்பங்களில் உங்களது முழு சக்தியையும் உங்களால் செலவிடமுடியும். நீங்கள் மேம்போக்காக இருக்க மாட்டீர்கள். வாழ்க்கை அபாயத்தில் இருக்கும்போது முழு சக்தியோடு இருப்பீர்கள்.

நான் அந்த பாறையை நகர்த்தி, அதை தூக்கினேன். – அதை என்னால் நகர்த்த முடியும் என்பதையே என்னால் நம்ப முடியாது. அதை எடுத்து கிணற்றில் வீசிவிட்டு ஓடினேன். பாறை கிணற்றில் விழுந்த சத்தத்தால் என்னை பின்தொடர்ந்த மக்கள் என்னை பின் தொடர்வதை நிறுத்தி விட்டனர். அவர்கள் அந்த கிணற்றை சூழ்ந்து கொண்டனர். நான் கிணற்றில் குதித்து விட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டனர். இப்படித்தான் நான் தப்பி வந்தேன். என்றான்.

தந்தை, நீ இப்போது தூங்கு போ, என் வேலை முடிந்தது. இனிமேல் எதையும் என்னை கேட்காதே. உன்னிஷ்டப்படி செயல்படலாம் என்றார்.

License

Share This Book