5

மிக மிக அழகான விஷயங்கள் இருக்கின்றன. அதில் பல்வேறு விதங்கள் உண்டு. இசையும் நடனமும் மிகவும் உடல் சார்ந்த விஷயங்கள். அவற்றோடு செல்லும்போது அவை அழகானவை, ஆனால் ஒருவர் அதோடு நின்று விடக் கூடாது, அவற்றால் தடை பட்டுவிடக் கூடாது. அவை மேலும் உயர்ந்த நிலை செல்லும் வாயிலை திறந்து விடும்.

உதாரணமாக, நீ இசையை நேசித்தால் விரைவில் இசை கரைந்து நீ மௌனத்தில் ஆழ்ந்து விடுவாய். நீ நடனத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தால் விரைவில் நடனம் மறைய வேண்டும், அப்போதுதான் உன்னால் இருப்பு நிலையின் அசையாத தன்மையினுள் இருக்க முடியும்.

சைனாவில் ஒரு பழமையான கதை ஒன்று உண்டு. ஒருவன் தன்னைத் தானே மிகவும் சிறந்த வில்வீரனாக கூறிக் கொண்டான். அவன் அரசரிடம் சென்று, “நான் யாருடைய சவாலையும் ஏற்கத் தயார். நான் வில்வித்தையை முப்பது வருடங்களாக பயிற்சி செய்து வருகிறேன். இந்த ராஜ்ஜியம் முழுவதிலும் எனக்கு இணையாக போட்டியிடக்கூடிய யாரும் இல்லை எனபது எனக்குத் தெரியும். ஆனால் இது அறிவிக்கப்பட வேண்டும்……. ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படும். அதற்க்குள் யாராவது என்னுடன் போட்டியிட வந்தால் நான் தயார். அப்படி யாரும் வராவிடில் அல்லது வந்து என்னால் தோற்கடிக்கப்பட்டுவிட்டால், இந்த ராஜ்ஜியத்தின் பிரதான வில்லாளனாக, சிறந்த வில் வித்தையாளனாக என்னை நீங்கள் அறிவிக்க வேண்டும்” என்று கேட்டான்.

அவன் கூறுவது யாவும் உண்மையே, எதுவும் மிகையாக கூறப்பட்டதல்ல என்று அரசருக்குத் தெரியும். அவர் பார்த்ததிலேயே மிகவும் சிறப்பான வில்வித்தையாளன் அவன். அந்த அரசிலேயே அவனுக்கு நெருக்கமாக வரக்கூடிய அளவில் கூட யாரும் இல்லை. அவன் அந்த கலையை மிகவும் ஆழமாக பயின்றிருந்தான். அரசரிடம் ஒரு வயதான வேலைக்காரன் இருந்தான். அவன் எப்போதும் அரசருடன் இருப்பான். ஏனெனில் அரசரின் தந்தை அரசரின் சிறு வயதிலேயே இறந்துவிட்டதால் இவன்தான்
தந்தை போல கூடவே இருந்து அவரை கவனித்து வளர்த்து ஆளாக்கி பயிற்சி கொடுத்து பாதுகாத்து அவரை அரியணையில் அமர்த்தி அரசராக்கினான். ஆகவே அரசர் எப்போதும் அவனுக்கு தந்தை போல மரியாதை கொடுப்பார்.

இப்போது அரியணையின் கீழே அமர்ந்திருந்த அவன் சிரித்தான்.

அரசர், “ஏன் சிரிக்கிறாய்? அவன் கூறியது உண்மைதானே. எனக்கு இவரையும் இவரது வில்வித்தையையும் தெரியும். கண்களை கட்டிக் கொண்டு கூட இவர் குறி பார்த்து அம்பு விடுவார். கண்களை கட்டிக் கொண்டு பறக்கும் ஒரு பறவையைக் கூட இவர் வீழ்த்திவிடுவார். இவர்க்கு எந்த வகையிலும் ஈடு இணையே கிடையாது.” என்றார்.

அதற்கு அந்த வேலைக்காரன், “நீங்கள் வயதில் இளையவர். எனக்கு தெரிந்த ஒருவர் முன் இவர் ஒரு கத்துக்குட்டி. அவர் மிகவும் வயதானவர். கிழவர். என்னைவிடவும் வயதானவர். அவர் மலை பள்ளத்தாக்கில் வசிக்கிறார். இவரை நீங்கள் சிறப்பானவன் என்று அறிவிப்பதற்கு முன்னால் இவர் போய் அவரை சந்தித்துவிட்டு வரட்டும். அவரை பார்ப்பது மட்டுமே போதும். போட்டி என்பது தேவையேயில்லை.” என்றான்.

இது ஒரு மிகபெரிய சவால். ‘அவரை பார்ப்பது மட்டுமே போதுமா? போட்டி எதுவும் தேவையில்லையா’ என்ற போது “அவர் ஒரு குரு, அவருடன் போட்டியிட முடியாது” என்று கூறிய வயதானவன் அந்த கிழவர் இருக்கும் குகைக்கு செல்லும் வழியை கூறினான்.

இதைக்கேட்டு அந்த வில்வீரன் மலையில் மைல்கணக்கில் சென்று இறுதியில் அந்த குகையை கண்டு பிடித்தான். அங்கே பார்த்தவுடன் அவன் சிரித்தான். ஏனெனில் ஒரு கிழவன் மட்டுமே அங்கிருந்தான். அந்த குகையில் அம்பும் இல்லை, வில்லும் இல்லை. ‘என்ன விதமான வில்லாளன் இவர்.?’ மிகவும் வயதாகி விட்டிருந்தது. தொண்ணுறு, தொண்ணுறு ஐந்து, அதற்கு மேலும் இருக்கக் கூடும். அவரால் குறி பார்த்து அம்பு எய்ய
முடியாது, அவரது கைகள் நடுங்கும். அவர் மிகவும் வயதானவர்.

“அரசர் உங்களை சந்திக்க என்னை அனுப்பினார்” என்று கூறினான்.
அந்த கிழவன், “அரசரிடமிருந்து எனக்கு தகவல் வந்தது. ஆனால் உனக்கு ஒரு சிறிய பரிசோதனை செய்த பின் தான் எதையும் முடிவு செய்ய முடியும். நான் எல்லோரையும் சந்திப்பதில்லை. குறைந்த பட்சம் நீ வில்லாளனாக இருக்கிறாய். அதனால் ஒரு சிறிய பரீட்சை வைக்க வேண்டும்.

‘சிறந்த வில்லாளனாக இருப்பது அப்புறம். முதலில் அவர் இவனுக்கு வில்வித்தையில் ஏதாவது திறமை இருக்கிறதா, ஏதாவது ஆற்றல் இருக்கிறதா, ஏதாவது கூர்மை இருக்கிறதா’ என்று பரிசோதிக்க விரும்புகிறார்.

கிழவன் அந்த இளைஞனை தன்னுடன் அழைத்துக் கொண்டு குகையை விட்டு
வெளியே வந்தார். “நீ உன்னுடைய அம்பையும் வில்லையும் உன்னுடன் எடுத்துக் கொண்டு வரும்போதே நீ கத்துக்குட்டி என்று கண்டேன். ஏனெனில் சிறந்த வில்லாளனுக்கு எதுவும் தேவையில்லை. ஒருவர் தனது திறமையின் இறுதி நிலையை எட்டும்போது அவர் வில்லாளனாக இருந்தால் தனது வில்லையும் அம்பையும் வீசி விடுவார், அவர் இசைக் கலைஞனாக இருந்தால் தனது இசைக் கருவியை வீசியெறிந்து விடுவார். அவர் ஓவியராக இருந்தால் தனது பிரஷ்ஷையும் பலகையையும் வீசி விடுவார் என்ற மூதுரையை கேள்விப்பட்டதில்லையா?” என்று கேட்டார். அதற்கு இவன், “கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் புரிந்ததில்லை.” என்றான்.

“இப்போது நீ புரிந்து கொள்ளக் கூடிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய். என்னுடன் வா.” என்றான் கிழவன். அங்கே ஒரு பாறை ஒரு இடத்தில் மிகவும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அதன் கீழே ஆயிரக்கணக்கான அடிகள் ஆழமான கிடுகிடு பள்ளம். கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது. உயிர் வாழ வாய்ப்பே இல்லை. அந்த அளவு அபாயகரமான பள்ளத்தாக்கு. அந்த பாறைக்குச் சென்றான் அந்த கிழவன். இளைஞன் நடுங்கிக் கொண்டு இருந்தான். அவன் அந்த பாறைக்கு கூட செல்லவில்லை. கிழவன் சென்றான், ஆனால் இவன் செல்லவில்லை. நடுங்கிகொண்டே நின்று கொண்டிருந்தான். கிழவன், “நடுக்கத்தை நிறுத்து. இது வில்லாளனுக்கு அழகல்ல.” என்றான். மேலும் அந்த கிழவன் அந்த பாறையின் முனைக்கு சென்றான். பாறையின் நுனியில் பாதி பாதம் வெளியே இருக்குமாறு நின்றான். அங்கே இருந்தவாறே இளைஞனை அழைத்து, “வந்து என் அருகில் நில்” என்று அழைத்தான்.
இளைஞன் ஒரு அடி எடுத்து வைத்தான், இரண்டாவது அடி எடுத்து வைத்தான். பின் கீழே படுத்து விட்டான். நடுங்கி வியர்த்து விருவிருத்து வெலவெலத்து போனான்.

“என்னை மன்னித்து விடுங்கள். என்னால் நீங்கள் நிற்க்கும் இடத்திற்கு வர முடியாது. ஒரு சிறிது தப்படி எடுத்து வைத்தாலும், ஒரு காற்று பலமாக அடித்தாலும், ஒரு வினாடி மறந்து விட்டாலும் போதும் நாம் முடிந்தோம். நான் உங்களை இங்கே பார்க்கத்தான் வந்தேனே தவிர தற்கொலை செய்து கொள்ள வரவில்லை. நீங்கள் அங்கு நிற்கிறீர்கள் என்பதையே என்னால் நம்பமுடியவில்லை.” என்றான்.

கிழவன், “வில்வித்தை ஒரு மனிதனுக்கு தருவது அசையாத உள்ளம், நடுங்காத இதயம். இப்போது எனக்கு வில்லும் அம்பும் தேவையில்லை. நீ என் குகையை சுற்றி பார்த்ததையும் வில்லும் அம்பும் அங்கில்லாததால் இவர் எப்படி ஒரு வில்லாளனாக இருக்க முடியும் என்று நினைத்து புன்னகை செய்ததையும் நான் அறிவேன். இப்போது நான் என் வில்திறமையை உனக்கு காட்டப் போகிறேன்.” என்றார்.

அவர் மேலே பார்த்தார். மேலே ஒன்பது பறவைகள் பறந்து கொண்டிருந்தன. அவர் அந்த ஒன்பது பறவைகளையும் கூர்ந்து பார்த்தார். அந்த ஒன்பது பறவைகளும் கீழே இறந்து விழுந்தன. அவர், “நீ உள்ளே அசையாமல் இருந்தால் பார்வையே போதும். அம்புகள் தேவையில்லை. ஆகவே திரும்பி சென்று வில்வித்தையை பயிற்சி செய். பட்டம் எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நான் உயிரோடு இருக்கும்வரை பட்டம் என்பதை நினைத்துக் கூட பார்க்காதே. நான் போட்டியாளன் அல்ல தான். நீ உன்னை சிறப்பானவன் என்று அறிவித்துக் கொண்டால்கூட நான் கவலைப்பட போவதில்லை.
யாருக்கு வேண்டும்? உங்களுடைய பட்டம், பதவி, சிறப்பானவன் என்ற பாராட்டு என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை குழந்தைகளின் விளையாட்டு.

ஆனால் அரண்மனையில் இருக்கும் அவனுக்கு என்னைத் தெரியும். அதனால் நான் இருக்கும் வரை உன்னை வெற்றியாளன் என்று அறிவிப்பது நடக்காது. நீ உண்மையாக வில்வித்தையில் ஆழ்ந்து சென்று பயிற்சி செய்தால் நீ வெற்றியாளன் ஆகலாம். மேலும் நான்தான் உன்னை வெற்றியாளன் ஆக்க முடியும். அரசர் அல்ல. அவருக்கு வில்வித்தையைப் பற்றி என்ன தெரியும். அதனால் அவரிடம் சொல்லிவிடு. ‘உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று கூறி விடு. சரியான சமயத்தில் நான் உயிரோடு இருந்தால் நானே வருவேன். நான் இறந்துவிட்டால் வேறு யாரையாவது அனுப்புவேன், அல்லது வேறு ஏதாவது ஏற்பாடு செய்வேன். என்றார்.

பத்து வருடங்கள் கடந்து விட்டன. அந்த கிழவன் இறந்து கொண்டிருந்தார். அவர் சமவெளியில் வசித்து வந்த தனது மகனை அழைத்து – அவருக்கும் வயதாகியிருந்தது – அவரிடம் அந்த வில்லாளனைப் பற்றிக் கூறி, “சென்று அவரைப் பார்த்து நிலைமை என்னவென்று வந்து கூறு” என்றார்.
மகன் அங்கே சென்றார். அந்த வில்லாளன் கிழவர் இன்னும் தன்னை நினைவில் வைத்திருந்து மகனை அனுப்பியதைக் குறித்து மிகவும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தார். மகன் ஒரு பெரிய வில் சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அவர் “இது என்ன?” என்று கேட்டார்.

அதற்கு வில்லாளன் “அது எனக்குத் தெரிந்த ஏதோவொன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது எனக்குத் தெரியாது. நான் கேட்க வேண்டும், யாருக்காவது தெரிந்திருக்கலாம்” என்றார்.

அதற்கு மகன், “நீங்கள் ஒரு வில்லாளன் என்று கேள்விப்பட்டேன்.” என்றார்.
அவர், “என் இள வயதில் இருந்தேன், ஆனால் எல்லோரும் இளவயதில் முட்டாளாக இருப்பது இயல்புதானே. நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனால் உன் தந்தைதான் என்னை எனக்கு புரிய வைத்தார்.” என்றார்.

அந்த வில்லாளன் வில் என்ற பெயரையே மறந்து விட்டார் என்பது அந்த கிழவனிடம் கூறப்பட்டது. அதற்கு அந்த கிழவர், “அவன் தான் யார் என்று நிரூபித்து விட்டான் என்பது தெரிகிறது. நான் இறப்பதற்கு முன் கீழே சென்று அவன் வெற்றியாளன், வில்வித்தையில் நிபுணன் என்பதை அறிவிக்க வேண்டும்” என்றார்.

இப்போது அவனும் பார்த்த மாத்திரத்திலேயே பறவையை வீழ்த்தும் திறன்
கொண்டவனாகிவிட்டான். அவனது இருப்பு அசையாத தன்மை கொண்டு விட்ட படியால் அவனது இரண்டு கண்களில் இருந்து புறப்படும் பார்வையே போதும், அவையே அம்புகளாகி விடும். அவன், “ஒரு இசைக்கலைஞன் இசையில் மிகவும் தேர்ச்சி பெற்று விட்டால் அவன் தனது இசைக் கருவியை உடைத்துவிடுவான் என்று சொல்லப்படும் பழமொழியின் பொருள் எனக்கு இப்போது புரிகிறது. அப்போது கருவியால் என்ன பயன் ஏனெனில் அவை இன்னும் இந்த சத்தம் சார்ந்த உலகின் பாகம்தான். உண்மையான இசை மௌனம்தான்” என்றான்.

நீ இசையை கேட்கும்போது கூட உண்மையிலேயே உனது இதயத்தை தொடுவது அந்த ஒலி அல்ல, அந்த இரண்டு ஒலிகளுக்கு இடையே இருக்கும் மௌனம்தான், இடைவெளிதான். அந்த மௌனத்தை உனது இதயத்துக்கு கொண்டு வருவது எப்படி என்பதுதான் இசையெனும் கலையே. ஆனால் ஒரு மனிதன் அந்த மௌனத்தை தன்னுடைய இருப்பில் கொண்டு வர முடிந்தால், அப்போது நீ ஆழமான மௌனத்தில் ஆழ்கிறாய், அப்போது உனக்கு உண்மையான இசை என்பது என்னவென்று தெரியும்.

அப்போது இசை என்று நாம் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தது ஆரம்ப பாடம் என்பது உனக்குப் புரியும். இதுவே நடனத்திற்க்கும் பொருந்தும், மற்றும் எல்லா படைப்பு திறன் கொண்ட கலைகளுக்கும் பொருந்தும். தோன்றும் எதுவும் உண்மையல்ல. அது ஒரு கருவி. அதன்மூலம் நீ மறைந்திருக்கும், கடந்த, அறியாத ஒன்றைப் பற்றி விழிப்பு கொள்வாய்.

ஆகவே இசையை ரசிப்பது நல்லது, நடனத்தை ரசிப்பது நல்லது, இசையை வாசிப்பது நல்லது, நடனமாடுவது நல்லது – நினைவில் கொள் – அது இறுதியல்ல. நீ இன்னும் தூரம் சென்றாக வேண்டும் – இசையிலிருந்து, நடனத்திலிருந்து – அந்த கலையைப் பற்றி புரிய நீ அதில் ஆழமாக செல்ல வேண்டும். ஒவ்வொரு படைப்புக் கலையும் உன்னை உன் உள் மையத்திற்கு – எங்கே அமைதியும் மௌனமும் சாந்தமும் உள்ளதோ அங்கே – கொண்டு சேர்க்கும்.

பின் உன்னால் “நான் கேட்க இயலாததை கேட்டேன், பார்க்க இயலாததை பார்த்தேன்” என்று சொல்ல முடியும்.

License

Share This Book