17

ரவீந்திரநாத் தாகூரின் மிக அழகான கவிதைகளில் ஒன்று ‘இரவு அரசன்’.

மிகப் பெரிய பழமை வாய்ந்த இரவு அரசனின் கோவில் ஒன்று இருந்தது. அதில் ஆயிரம்
மதகுருக்கள் இருந்தனர். ஒருநாள் தலைமை பூசாரியின் கனவில் இரவு அரசன் தோன்றி, “நாளை நான் கோவிலுக்கு விஜயம் செய்யப் போகிறேன். சுத்தப் படுத்தி தயாராக வைத்திருங்கள். நான் அங்கு பல நூற்றாண்டுகளாக வரவில்லை. நான் வேறு பல கோவில்களுக்கும் போக வேண்டும்” என்று கூறினார்.

தலைமை பூசாரி வேர்த்துக் கொட்டியபடி விழித்து எழுந்தார், ‘நீங்கள் வர வேண்டும், தரிசனம் தர வேண்டும், உங்களுடைய ஒளி பொருந்திய தரிசனத்தை நாங்கள் பெற வேண்டும்.’ என்றுதான் தினமும்
வேண்டிக் கொண்டிருக்கிறார்.

இப்போது இந்த மாதிரி கனவு வந்துள்ளது. ஆனால் இந்த கனவு- – –. நடு இரவில் அவர்
மற்ற அனைத்து மதகுருக்களையும் எழுப்பி அழைத்து, “உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். ஆனால் இந்த பிரச்னை உண்மையிலேயே சிக்கலானது. என் கனவில் இரவு அரசன் தோன்றி கோவிலை சுத்தம் செய்து தயார் படுத்துங்கள் நாளை நான் கோவிலுக்கு வரப் போகிறேன் என்றார்.” என்று கூறினார்.

மற்ற குருக்கள் அனைவரும் சிரித்தனர். “உங்களுக்கு மிகவும் வயதாகிவிட்டது என்பது தெரிகிறது. ஒரு கனவிற்காக அனாவசியமாக எங்கள் எல்லோரையும் தொல்லைப் படுத்தி விட்டீர்கள்”. என்றனர். அதற்கு அவர், “நீங்கள் எதனால் என்னைப் பார்த்து சிரிக்கிறீர்கள் என எனக்குப் புரிகிறது. நீங்கள் சிரிக்கிறீர்கள். எல்லோரையும் எழுப்புவதற்கு முன்னால் நான் இதைப் பற்றி யோசித்தேன். ஆனால் தயாராக வைப்பதில்
தப்பில்லையே. எப்படியும் இந்த கோவிலுக்கு வெள்ளையடித்து சுத்தம் செய்தாக வேண்டும். நீண்ட நாட்களாக எதுவுமே செய்யவில்லை”. என்றார்.

இந்த கோவிலை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்து விட்டனர். இது அடர்த்தியான
வனத்திற்கு நடுவில், மக்கள் நடமாட்டத்திற்கு வெகு தொலைவில் தள்ளி இருக்கிறது.
மதகுருக்களும் கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகப் பட ஆரம்பித்துவிட்டனர். பலர் பிரார்த்தனை
செய்வதைக் கூட நிறுத்தி விட்டனர்.

பலர் நாத்திகர்களாகி விட்டனர். “இரவு அரசன் இருக்கிறாரா இல்லையா என்பது யாருக்குத் தெரியும்? நாம் இங்கேயேதான் இருக்கிறோம். நாம் அவரை பார்த்ததேயில்லை. நமது பெற்றோர்களும்
இங்கேயேதான் இருந்தனர். அவர்களும் அவரைப் பார்த்ததேயில்லை. அவர்களது பெற்றோர்களும்
இங்கேயேதான் இருந்தனர். அவர்கள் கூட அவரை பார்க்க முடிந்தது இல்லை. நூற்றாண்டுகள் கடந்து
விட்டன. நாம் இந்த சிலைகளுக்கு சேவை செய்துகொண்டே இருக்கிறோம், இப்போது திடீரென நீங்கள் உங்கள் கனவை நம்ப சொல்லி சொல்கிறீர்கள்.” என்றனர்.

தலைமை குரு, “நானே அந்த கனவை நம்பவில்லை, ஆனால் அதில் தவறேதும் இல்லையே! ஒருகால் இது உண்மையாக இருந்து அவர் வந்து விட்டால்……… என்று நினைத்துப் பாருங்கள்.  அதற்கு வாய்ப்பில்லை என எனக்குத் தெரியும், ஆனால் ஒரே ஒரு சதவிகிதம் சாத்தியக் கூறு உள்ளது. அவர் வருவதற்கான வாய்ப்பு 99 சதவிகிதம் இல்லை. அது ஒரு கனவு! ஆனால் அப்படி நடந்துவிட்டால்…. அவர் வந்து, அவரை வரவேற்க இனிப்புகள் இன்றி மலர்கள் இல்லாமல் இசையோ,
நடனமோ, தீபமோ இல்லாமல், நாம் தயாராக இல்லாமல் மோசமாக இருப்பதை பார்த்தால் என்ன
நினைப்பார்?  ஆயிரம் பேர்! எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்கமாட்டாரா?

நாம் கோவிலை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து தீபங்கள் ஏற்றி வைத்திருந்தால் அவர் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி அதனால் ஒன்றும் தப்பில்லை. இது நமது கோவில், நாம்
இங்கே வாழ்கிறோம், நாம் இதை கொண்டாடுவோம். விருந்தாளி வருகிறேன் எனக்கூறி வராமல் போய்விடலாம், அலங்கரிப்பதில் எதுவும் தப்பில்லையே! ஆனால் தயார் படுத்தாமல் இருந்தால் மிகப் பெரிய இழப்பாகிவிடும். அதற்கு நான் தயாரில்லை.” என்றார்.

இந்த கூட்டம் முடியும்போது கிட்டத்தட்ட விடிந்து விட்டது. தலைமைகுரு சொல்வது சரி என எல்லோரும் நினைத்தனர். கோவில் சுத்தப்படுத்தப் பட்டது. நூற்றுக்கணக்கான சிலைகள் பல ஆண்டுகளாக கவனிக்கப் படாமல் அழுக்கோடும் தூசியோடும் இருந்தன. கோவிலை சுத்தப்படுத்தி மலர்களாலும் தீபங்களாலும் அலங்கரித்து, வாசனை திரவியம் உபயோகப்படுத்தி மணம் வீசுமாறு செய்து சிறப்பான உணவும் இனிப்பும் தயாரித்து காத்திருந்தனர். பாதிநாள் கடந்தது. உடனே சந்தேகம் எழுந்தது. நண்பகலாகி விட்டது, அவர் இதுவரை வரவில்லை. ‘நாம் இந்த கிழவனின் கனவால் தேவையில்லாமல் அல்லல் படுகிறோம். எந்த கோவிலுக்காவது எந்த கடவுளாவது வந்ததாக யாராவது கேள்வி பட்டதுண்டா? நடைமுறையிலேயோ, சரித்திரித்திலேயோ அப்படிக் கிடையாது. நாம் கனவை நம்பி வீணாக அவதிப் படுகிறோம். விருந்தாளி வராமல் நாம் சாப்பிடவும் முடியாது’ என எல்லோரும் பொருமினர்.

இது அந்த கோவிலில் உள்ள விதி. முதலில் கடவுளுக்கு படைக்கப் பட வேண்டும். பின் அந்த குருவினர் அந்த உணவை பகிர்ந்து கொள்ளலாம். இதுவரை அது மிகவும் சுலபமான
விஷயமாக இருந்தது. ஏனெனில் கடவுள்கள் அனைத்தும் கல்சிலைதான். இன்று அது கடினமான
ஒன்றாகி விட்டது. மிகவும் நேரமாகி விட்டது. சூரியன் இறங்க துவங்கிவிட்டான். ஒவ்வொருவரும் அந்த வயதான குரு மீது கோபப்பட்டனர். ‘இது மிகவும் பெரிய கோவிலாகையால் சுத்தப்படுத்த நிறைய ஆட்களை வைத்தும் சுத்தப்படுத்தவும் மலர்களுக்காகவும் ஏகப்பட்ட பணத்தை வீண் செலவு
செய்துவிட்டோம்.’         வயதான குரு, “என்னை மன்னித்துவிடுங்கள். நான் வேறு என்ன
சொல்வது? இனிமேலும் அவர் வரக்கூடும்.” என்றார்.

இரவாகி விட்டது. வயதான குருவின் பேச்சை கேட்பதில்லை என அவர்கள் முடிவெடுத்தனர். “இனிமேலும் காத்திருப்பது வீண்! சூரியன் மறைந்து விட்டது. நாள் முழுவதும் வேலை செய்து பட்டினி கிடந்திருக்கிறோம். அதனால் சோர்வாக இருக்கிறது சாப்பிட்டு படுக்கப் போகலாம்!”. என்றனர்.

அந்த வயதான குரு, “ஒரு இரவு காத்திருக்கலாம். ஏனெனில் அவர் இரவு
அரசர் – நாம் அதை முற்றிலுமாக மறந்து விட்டோம். அவர் பகலில் வரமாட்டார். வருவதாக இருந்தால் இரவில்தான் வருவார்”. என்றார்.

அதற்கு அவர்கள், “உங்களுடைய கனவை நம்பி பசியுடன் முழு இரவும் காத்திருப்பது முட்டாள்தனம்.
நாங்கள் அப்படி நம்ப தயாரில்லை”. என்றனர்.

அவர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தனர்.

அதற்கு அந்த வயதான குரு, “கலகம் செய்ய தேவையில்லை. நானும் பசியோடு சோர்வாக இருக்கிறேன், நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன். அது ஒரு கனவாக மட்டுமே கூட
இருக்கலாம்”. என்றார்.

அவர்கள் அந்த கோவிலின் இறைவனுக்காக தயார் செய்து வைத்திருந்த சுவையான உணவுகளை
சாப்பிட்டுவிட்டு சோர்வாக இருந்ததால் முன் இரவிலேயே தூங்க சென்று விட்டனர்.

நடு இரவில் அந்த கோவிலின் இறைவனான இரவு அரசர் தங்க ரதம் அங்கு வந்தது. ரதம்
மண் பாதையில் வந்ததால் அதன் சுவடுகள் கோவிலின் முகப்பில் பதிந்தன. அந்த கோவிலின்
கதவை அடைய ஆயிரம் படிகள் ஏறி வர வேண்டும். இறைவன் ஆயிரம் படிகளையும் கடந்து
கதவருகில் வந்து நின்றார்.

ரதம் மண் பாதையில் வந்த சத்தம் கேட்ட போது, பாதி தூக்கத்தில் இருந்த ஒருவர், “எனக்கு மிகப் பெரிய ரதம் வரும் சத்தம் கேட்கிறது. அவர் வந்து விட்டார் போல இருக்கிறது”. என்றார்.

அதற்கு வேறொருவர், “தொந்தரவு செய்யாதே, ரதமும் கிடையாது, ஒன்றும்
கிடையாது! ஒரு மேகம் இடிக்கிறது, அவ்வளவுதான்!  போதும் கற்பனை”. என்றார்.

கடவுள் கதவருகில் வந்து நின்ற போது மற்றொருவர், “ஆனால் நான் காலடி சத்தத்தை
கேட்டேன், யாரோ கதவருகில் வந்திருக்கிறார்”. என்றார்.

பலர் ஒன்று சேர்ந்து, “சத்தம் போடாமல் அமைதியாக இரு, அது பலமான
காற்றடிக்கிறது. அதனால் கதவு சத்தமிடுகிறது. ஏமாந்து போகாதே! கடவுள் கதவை
தட்டுவார் என நினைக்காதே”. என்றனர்.

காலையில் மண்பாதையில் ரதம் வந்துபோன தடயத்தையும் ஆயிரம் படிகளில் யாரோ ஏறி
வந்த காலடி சுவடையும் பார்த்துவிட்டு அவர்கள் கதறினர். “கடவுள் வந்திருக்கிறார் – ஆனால் நாம் தூங்கி விட்டோமே”!

உன்னை தட்டி எழுப்பக்கூடிய குருவை கண்டுபிடிப்பது சாத்தியம்தான், ஆனால் நீ
தூங்கிக் கொண்டிருந்தால் அந்த தூக்கத்தில் ஆயிரத்தோரு காரணங்களை தூங்கிகொண்டே
இருப்பதற்கு கண்டு பிடிப்பாய். தவிர்ப்பதற்க்காக ‘அது காற்றாக இருக்கும், மேகமாக இருக்கும்’ என ஏதாவது ஒரு காரணத்தை கண்டு பிடிப்பாய். யாரும் வரவில்லை என கூறிக் கொண்டு திரும்பி படுத்து
மறுபடியும் தூங்க ஆரம்பித்து விடுவாய்.

விருந்தாளி வருவதற்காக கதவருகில் முழு விழிப்போடு ஆழமான நம்பிக்கை உணர்வோடும்
அளப்பரிய அன்போடும் காத்திருக்கும் உனது உள்ளுணர்வை பொறுத்தது அது.

உண்மையில் உனது நேசிப்பும் நம்பிக்கை உணர்வும்தான் உருவாக்குகிறது – யாரும் வருவதில்லை.

உனது நேசம் உருவாக்குகிறது, உனது நம்பிக்கையுணர்வு உருவாக்குகிறது – வேறு யாரும் வரப்
போவதில்லை

உனது நேசமும் நம்பிக்கையுணர்வும் மலர்ந்து உன்னைச் சுற்றி மணம் வீசும்.

உன்னைச் சுற்றி ஆயிரத்தோரு தீபங்கள் ஒளி வீசும்! அது உனது சக்திதான்! உனது அளப்பரிய சக்திதான்! அதைத் தவிர வேறு கடவுள் என எதுவுமில்லை.

License

Share This Book